Friday, May 6, 2016

ரசாயனம் உள்ளிட்ட துறைகளுக்கான தனி தேடியந்திரங்கள்.

ரசாயனத்துறையை பொருத்தவரை கெமிக்கலைஸ் (http://www.chemicalize.org/) , கெம் எக்ஸ்பர் (https://www.chemexper.com/), இமாலிகியூல்ஸ் (https://www.emolecules.com/), கெம் ஸ்பைடர் (http://www.chemspider.com/ ) உள்ளிட்ட தேடியந்திரங்கள் மூலக்கூறு வடிவங்கள் மற்றும் அவற்றின் சூத்திரங்களை தேட உதவுகிறது. மூலக்கூறு வடிவங்களை வரைந்து காட்டும் வசதியையும் இவை அளிக்கின்றன. ரசாயன பெயர்கள் கொண்டு தேடும் வசதியும் இருக்கிறது.
இதேபோல வால்டோ (http://vadlo.com/) உயிரியலுக்கான தேடியந்திரமாக விளங்குகிறது. உயிரியல் சார்ந்த ஆய்வு தரவுகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளில் இருந்து தேடி தகவல்களை அளிக்கிறது. பயோ எக்ஸ்பிளோரர் (http://www.bioexplorer.net/search_engines/) தளமும் உயிரியல் கட்டுரை மற்றும் தகவல் தேடலில் கைகொடுக்கலாம்.
அறிவியல் சார்ந்த கட்டுரைகளை தேட சயன்ஸ் அட்வைசர் தேடியந்திரத்தை (http://science-advisor.net/) நாடலாம். அறிவியல் கட்டுரகள் மற்றும் அறிவியல் சார்ந்த விவாத குழுக்களில் இருந்து இது தகவலை தேடித்தருகிறது. பிசிக்ஸ்லேப் (http://www.physicslab.org/search.aspx) தேடியந்திர வழிகாட்டியும் இதற்கு உதவுகிறது.
சயிண்டில்லியான் (https://www.scientillion.com/) தேடியந்திரமும் அறிவியல் சார்ந்த அருமையான தேடியந்திரமாக இருக்கிறது. கட்டுரைகள், சூத்திரங்கள் என பலவற்றை தேடலாம். அறிவியல் கட்டுரைகள் தேடும்போது இது முன்வைக்கும் அறிவியல் முடிவுகள் மிகவும் பயனுள்ளவையாக இருப்பதை உணரலாம்.

கணித தேடியந்திரங்கள்

கணிதம் மீது விருப்பம் கொண்டவர்கள் சிம்பாலேப் (https://www.symbolab.com) தேடியந்திரத்தை பார்த்தால் உற்சாகம் கொள்வார்கள். அதன் முகப்பு பக்கம் கணிதவியல் குறியீடுகள் கொண்ட விசைப்பலகை மற்றும் சூத்திரங்களுடன் வரவேற்பதே இதற்கு காரணம்.
சிம்பாலேப்பும் ஒரு தேடியந்திரம் தான்; ஆனால், சாதாரண தேடியந்திரம் அல்ல. கணிதத்திற்கான சிறப்பு தேடியந்திரம்.
கணித சமன்பாடுகளை தேடுவதற்கான கணித சமன்பாடுகள் தொடர்பான சந்தேகம் இருந்தாலோ அல்லது தெளிவு தேவைப்பட்டாலோ இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தலாம். கணித சமன்பாடுகளை இதில் சமர்பித்தால் அதற்கான விடைகளை ஒவ்வொரு கட்டமாக அழகாக முன்வைக்கிறது. இந்த தேடியந்திரத்தை சோதித்து பார்க்கவே ஒரு திறன் வேண்டும். கணிதத்தில் திறமையும் ஆர்வமும் கொண்டவர்களே இந்த தேடியந்திரத்தை சீர்தூக்கி பார்த்து தீர்ப்பு வழங்க முடியும்.
கணிதத்திற்கு என்று தனியே தேடியந்திரமா என வியப்பு ஏற்படலாம். ஆனால், சிம்பாலேப் மட்டும் அல்ல; வேறு சில கணித தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன.
சர்ச் ஆன் மேத் டாட் காம் (http://www.searchonmath.com): மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கணித சமன்பாட்டை சமர்பித்து கணிதம் தொடர்பான இணைய பக்கங்களை தேடி கண்டுபிடிக்க உதவுகிறது. கணித சமன்பாடுகளை சமர்பிக்க வசதியாக இதன் முகப்பு பக்கத்தில் கணித குறியீடுகளை கொண்ட விசைப்பலைகை இருக்கிறது.
2008-ம் ஆண்டு பிரேசிலின் ரியோடிஜென்ரோவை சேர்ந்த கணித ஆய்வு மாணவர் பிளாவியோ பார்ப்பெய்ரி கோன்சாகாவால் (Flavio Barbieri Gonzaga) துவக்கப்பட்ட இந்த தேடியந்திரம் தொடர்ந்து ஆய்வு மாணவர்களின் பங்களிப்பால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
யூனிகேவஷன்.காம் (http://uniquation.com/en/): இணையத்தில் கணித தகவல்களை தேடித் தருவதற்கான தேடியந்திரம் என அறிமுகம் செய்து கொள்ளும் இந்த சேவையை பயன்படுத்த தகவல்களை குறிப்பிட்ட முறையில் சமர்பிக்க வேண்டும். இது தொடர்பான விளக்கமான வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளது. இணையத்தில் கணிதம் தொடர்பான பக்கங்களை தேட வழிகாட்டுகிறது.
ஈக்வேஷன்சர்ச் (http://www.equationsearch.com/): கணித சமன்பாடுகளுக்கான எளிமையான தேடியந்திரம். மாணவர்கள் வீட்டுப்பாடத்திற்காக பயன்படுத்தலாம். அல்ஜீப்ரா, ஜியாமெண்ட்ரி, கால்குலஸ் என தனித்தனி தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று தேடியந்திரங்களில் இருந்தும் சிம்பாலேப் வேறுபட்டிருக்கிறது. இது கணிதம் கற்பதற்கும் பயிற்சி பெறுவதற்குமான மேம்பட்ட வழியாக இருக்கிறது. அல்ஜீப்ரா, டிரிக்னாமெண்ட்ரி, கால்குலஸ் உள்ளிட்ட தலைப்புகளில் சமன்பாடுகளுக்கான விடையை தானாக போட்டு காண்பிக்கிறது.
மற்ற தேடியந்திரம் போல குறிச்சொற்களை கொண்டு தேடாமல், சமர்பிக்கப்படும் குறியீடுகளின் பொருளை உணர்ந்து அவற்றுக்கு பொருத்தமான முடிவுகளை முன்வைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சமன்பாட்டில் சி எனும் ஆங்கில எழுத்து நிலையான தன்மை கொண்டதாக இருக்கும். அதே எழுத்து வேறு ஒரு சமன்பாட்டில் மாறும் தன்மை கொண்டதாக இருக்கும். இது போன்ற நுணுக்கமான வேறுபாடுகளை எல்லாம் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் பிரத்யேகமான தேடல் முறை கொண்டு இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிராபுக்கான கால்குலேட்டர், கணக்குகளை குறித்து வைப்பதற்கான குறிப்பேடு மற்றும் பயிற்சி செய்வதற்கான பக்கம் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
இஸ்ரேலைச்சேர்ந்த எஸ்குவஸ்ட் (Eqsquest) எனும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. மைக்கேல் ஆன்வி (Michal Avny), ஆடம் ஆர்னான் (Adam Arnon ) மற்றும் லேவ் அலைஷே (Lev alyshayev) ஆகிய கணித புலிகள் இணைந்து இந்த தேடியந்தர நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
தேடியந்திர செயல்பாடுகளுக்கு பின்னே கணிதம் இருக்கிறது என்றாலும் கூட, கணித தேடியந்திரங்கள் வழக்கமான தேடியந்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. கணிதவியல் சமன்பாடு மற்றும் குறியீடுகளை கையாள தனி முறை தேவை; லேட்டக்ஸ் சர்ச் (http://latexsearch.com/home.do) தேடியந்திரத்தில் இதுபற்றி தெரிந்துகொள்ளலாம்.

வாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உடல்நலம் பாதித்த ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை- விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்கள் அவதி

     சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு வர இயலாத நிலையில், நாற்காலியில் அமர வைத்து, தூக்கி வரப்பட்ட ஓய்வூதியர். படம்: ச.கார்த்திகேயன். ஓய்வூதிய அலுவலகங்களில் வாழ்வு சான்று அளிக்க நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று அரசு அறிவித்தும், அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் ஒத்துழைக்காத நிலையிலும் நேரில் வந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஓய்வூதியர்கள் இறந்த பின்னும், அவருக்கு ஓய்வூதியம் சென்றுகொண்டிருப்பதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. நேர்காணலில் பங்கேற்காவிட்டால் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேரில் வர இயலாதவர்கள் கடும் சிரமத்துக்கு இடையில், ஓய்வூதிய அலுவலகத்துக்கு வந்து நேர்காணலில் பங்கேற்றனர். இதற்கு ஓய்வூதியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள், வாழ்வு சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதை ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர், வருவாய் அலுவலர்கள் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அஞ்சல் மூலமாகவோ, வேறு நபர்கள் மூலமாகவோ ஓய்வூதிய அலுவலகத்துக்கு அனுப்பலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், முதியவர்கள் பலர் கடும் சிரமங்களுக்கு இடையில் ஆட்டோக்களிலும், கார்களிலும் அழைத்து வரப்பட்டனர். வசதி குறைவானவர்கள், வீட்டிலிருந்தே நாற்காலியை கொண்டு வந்து, அதில் ஓய்வூதியரை அமர வைத்து, அவரை அலுவலகத்துக்கு தூக்கிச் சென்று நேர்காணலில் பங்கேற்க வைத்தனர்.
இது தொடர்பாக ஓய்வூதியரை அழைத்து வந்த பெண் ஒருவரிடம் கேட்டபோது, “நேரில் வரத் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பும், அதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் குறித்தும் எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால், கண்டிப்பாக நேரில் அழைத்து வந்திருக்க மாட்டேன். அரசின் அறிவிப்பு குறித்து போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இது குறித்து மாற்று வழியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், இங்காவது, எளிதில் கண்களில் படும்படி விளம்பரப் பலகை வைக்கலாம். நான் எனது உறவினரை அழைத்து வர ஆட்டோவுக்கு வேறு செலவிட வேண்டியுள்ளது. அவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது” என்றார்.
இது தொடர்பாக ஓய்வூதியர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னையில் 37 ஆயிரம் பேர் மாநில அரசு ஓய்வூதியம் பெறுகின்றனர். நேரில் வர இயலாதவர்கள், வாழ்வு சான்றை அனுப்பி வைத்தால் போதும் என்றே கூறுகிறோம். அது தொடர்பாக அனைத்து செய்தித் தாள்களிலும் செய்திகள் வந்துள்ளன.
இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். நேரில் வர முடியாத 1,000 ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்வு சான்றை அனுப்பி வைத்துள்ளனர். அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் யாரையும் நேரில் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.